காஞ்சிபுரம் நகராட்சி 31வது வார்டில் சாலையில் ஆறாக வழிந்தோடும் கழிவுநீர்: தொற்றுநோய் பீதியில் பொதுமக்கள்

காஞ்சிபுரம், மார்ச் 17: காஞ்சிபுரம் நகராட்சி 31 வது வார்டில் கழிவுநீர் சாலையில் ஆறாக வழிந்தோடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் நகராட்சி 31வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதி கணிகண்டீஸ்வரர் கோயில் தெரு பின்புறம் பிள்ளையார் பாளையம், தாயார்குளம் செல்லும் சாலையில்  உள்ள பாதாள சாக்கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டது. இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல், சாலையில் ஆறாக ஓடுகிறது.

இதையொட்டி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் கடும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுதொடர்பாக பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம், பொதுமக்கள் சார்பில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்போக்கில் உள்ளனர்.

தற்போது 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி, சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடும்போது, இதன் மூலமாகவும் நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது என பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக, மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் அடைப்பை நிரந்தரமாக போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: