சேலம்-கோவை ஒன் டூ ஒன் பஸ்கள் பவானி பைபாசில் நின்று செல்லும்

சேலம், மார்ச் 13: சேலம்-கோவை ஒன் டூ ஒன் பஸ்கள் பவானி பைபாசில் நின்று செல்லும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியிருப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகள் விரைவாக செல்வதற்காக பல்வேறு வகைகளில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒன் டூ ஒன், எக்ஸ்பிரஸ், நான் ஸ்டாப், உணவகம் நில்லா பேருந்து, 3.33 மணிநேரம் என்ற பல வகைகளில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இந்த வகையில், சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் இருந்து கோவைக்கு ஒன் டூ ஒன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சங்ககிரி,பவானி பைபாஸ்,பெருந்துறை,அவினாசி போன்ற ஊர்களில் நிற்காமல், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ் புறப்பட்டதும், அடுத்த நிறுத்தமாக கோவையில் நிற்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக இந்த கோவை ஒன் டூ ஒன் பஸ்கள் அனைத்தும் பவானி பைபாசில் நின்று செல்கின்றன.

கோட்ட அதிகாரிகளின் உத்தரவின் பேரில், சேலத்தில் இருந்து செல்லும் போதும், மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து வரும்போதும் பவானி பைபாசில் ஒன் டூ ஒன் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், அந்த பஸ்களில் ஏறி வரும் பயணிகள் அவதியடைகின்றனர்.தங்களிடம் விரைந்து செல்வதாக கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு, இடையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது ஏன்? என கண்டக்டர்களிடம் கேள்வி கேட்டு அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.இருப்பினும் அனைத்து கோவை ஒன் டூ ஒன் பஸ்களும் கட்டாயமாக பவானியில் நிறுத்தப்படுகிறது.ஏதாவது ஒரு ஒன் டூ ஒன் பஸ் நிற்காமல் சென்றால்,அந்த பஸ்சின் டிரைவர் மீது சேலம் கோட்ட அதிகாரிகள் துறை ரீதியான சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

ஒன் டூ ஒன் என்று ேபார்டு வைத்துக்கொண்டு பல ஸ்டாப்புகளில் பஸ் நிறுத்தப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். இது சம்பந்தமாக பஸ் பயணி ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலம்- கோவை ஒன் டூ ஒன் பஸ்கள் பவானி பைபாசில் பயணிகள் ஏற்றி,இறக்க உத்தரவு உள்ளதா? உத்தரவு இருந்தால் நகல் தரவேண்டும் என்று தகவல் அறியும் சட்டத்தில் போக்குவரத்து கழகம் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.இதற்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் பதில் தெரிவித்துள்ளனர். அதில்,சேலம்-கோவை ஒன் டூ ஒன் பஸ்கள் சேலத்தில் இருந்து கோவை செல்லும் போதும்,

அதேபோல் கோவையில் இருந்து சேலம் வரும்போதும், அந்த நடையில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து முக்கியமான பஸ் ஸ்டாப்புகளில் நின்று செல்லும் என்றும், போக்குவரத்து கழகத்தின் நிதிபற்றாக்குறையை சமாளிக்க பஸ்கள் இந்த ஸ்டாப்புகளில் நின்று செல்லும் என்றும் பதில் அளித்துள்ளனர்.அதிகாரிகளின் இந்த பதிலால் சேலம்-கோவை ஒன் டூ ஒன் பஸ்சில் செல்லும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: