போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை

 

சேலம், ஏப்.29: சேலம் சரகத்தில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்கப்படுகிறதா என்று அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சேலம் சரகத்தில் இளைஞர்கள், போதைக்காக தூக்க மாத்திரை உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், ஒரு சில மருந்து கடைகளிலும் வலி நிவாரணி மருந்துகள் அதிகளவில் வாங்கி, உரிய ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை விற்கும் மருந்து கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்கப்படுகிறதா என்று மருந்து கடைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் சரகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்ய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையும் மீறி, ஒரு சில மருந்து கடைகளில் தூக்க, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருந்து கடைகள் தூக்க, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி கொடுக்கும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்ட ரீதியான நடவடிக்கையும், கடையின் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: