திருவேற்காடு நகராட்சியில் திடக் கழிவுகளை பிரித்து வழங்கும் 1000 பேருக்கு தூய்மை கடவுச்சீட்டு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், மார்ச் 13: திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு தூய்மை கடவுச்சீட்டுகளை வழங்கி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். பின்னர், கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் நெகிழி பொருட்களின் பயன்பாடு குறைப்பதற்கும், கையாளுவதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவேற்காடு நகராட்சி ஏறத்தாழ 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட  தேர்வு நிலை நகராட்சியாகும். சென்னையை ஒட்டி அமைந்துள்ள இங்கு தினசரி 23 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகிறது. மின்னணு கழிவுகள், தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. எனினும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை சிறப்புடன் செயல்படுத்த இன்னும் சில தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இதன் ஒரு பகுதியாக திருவேற்காடு நகராட்சியில், நகராட்சி சுகாதார பிரிவு, வணிக பெருமக்களுடன் இணைந்து புதிய வகையிலான விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருவேற்காடு நகராட்சியில் திடக்கழிவுகளை பிரித்து வழங்கும் பொதுமக்கள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தூய்மை கடவுச்சீட்டு வழங்கப்படும். இந்த தூய்மை கடவுச்சீட்டினை எடுத்துக்கொண்டு குறிப்பிடப்பட்டுள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினாலோ அல்லது சாப்பிட்டாலோ விலையில் தள்ளுபடி வழங்கப்படும். இந்த தூய்மை கடவுச்சீட்டினை 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அடுத்த கட்டமாக திடக்கழிவுகளை பிரித்து தரும்போது மக்கள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இந்த தூய்மை கடவுச் சீட்டினை வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். பின்னர் திருவேற்காடு நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர்களை பாராட்டி கலெக்டர் நினைவு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகராட்சி ஆணையர் எஸ்.செந்தில் குமரன், சுகாதார அலுவலர் எம்.மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: