பன்றிகளை விரட்ட போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாப பலி: விவசாயி கைது

பள்ளிப்பட்டு, மே 21: கரும்புத் தோட்டத்தில் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக முறைகேடாக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் புது காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தாஸ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை 4 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று கரும்பு சாகுபடி செய்து வருகிறார். கரும்புத் தோட்டத்தை காட்டு பன்றிகள் நாசப்படுத்துவதை தடுக்க, அனுமதியின்றி முறைகேடாக கரும்பு தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் கோணிப்பையில் மணல் நிரப்பிக் கொண்டு பைக்கில் எடுத்துச் சென்றபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பள்ளிப்பட்டு போலீசார் நந்தகுமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது கிராமத்திற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரின் மகன் பார்த்தசாரதி(19) நந்தகுமாரை விட்டுவிடுங்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் பதிவு செய்து அனுப்பி விடுவோம் என்று கூறிவிட்டு நந்தகுமாரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நந்தகுமாரை போலீசார் அழைத்து சென்ற சம்பவம் குறித்து பார்த்தசாரதியை அவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த சித்தரஞ்சன் என்பவரின் மகன் சாய்குமார்(23) என்பவரிடம் செல்போனில் பேசியபடி அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் அருகே சென்றபோது மின்வேலியில் சிக்கி சாய்குமார் அலறினார். பதறி அடித்துக் கொண்டு பார்த்தசாரதி ஓடி சென்றபோது அவரும் மின்வேலியில் சிக்கி அலறினார்.

சத்தம் கேட்டு வந்த கிராம இளைஞர்கள், இருவரும் கரும்பு தோட்டத்தில் தனித்தனியாக விழுந்து கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மின்சாரத்தை துண்டித்து விட்டு கரும்புத் தோட்டத்தில் இருந்து வாலிபர்களை மீட்டு பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளிப்பட்டு போலீசார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விவசாயி கோவிந்தராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பன்றிகளை விரட்ட போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாப பலி: விவசாயி கைது appeared first on Dinakaran.

Related Stories: