சாத்தான்குளத்தில் சாலையோர பள்ளம் சீரமைப்பு

சாத்தான்குளம், மார்ச் 12: சாத்தான்குளத்தில் ஒரு அடிக்கு உயர்த்தி அமைக்கப்பட்ட புதிய சாலையின் ஓரத்தில் முறையாக மணல் நிரப்பப்படாததால் விபத்து அபாயம் நிலவிய நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் சீரமைத்துள்ளனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றியுள்ள முதலூர், முத்துகிருஷ்ணாபுரம், விஜயராமபுரம் செல்லும் சாலை பராமரிப்பின்றி உருக்குலைந்தது. இதுகுறித்த புகார்களை அடுத்து பழைய சாலையை உடைத்து புதிய சாலை அமைக்கும் பணி பணி கடந்தமாதம் துவங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக சாலை அமைக்கப்பட்ட போதும் ஒரு அடி உயரத்துக்கு உயர்த்தி அமைக்கப்பட்டதோடு சாலையோரம் முறையாக மணல் நிரப்பாததால் ராட்சத பள்ளம் போல காணப்பட்டதோடு விபத்து அபாயமும் நிலவியது.

 குறிப்பாக அரசு பஸ் உள்ளிட்ட இதர வாகனங்கள் எதிரெதிரே வரும் போது மிகுந்த சிரமத்துடன் கடக்கவேண்டியுள்ளதோடு பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகளும் தவறிவிழுந்து காயமடையும் நிலையும் உருவானது. இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று முன்தினம் (10ம் தேதி) வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து உயர்த்தி அமைக்கப்பட்டுள்ள சாலையோரத்தில் மணல் நிரப்பி பள்ளத்தை சீரமைத்தனர். இதை பொதுமக்கள் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

Related Stories: