சிவகங்கை மாவட்டத்தில் சரியும் மாங்காய் விளைச்சல்

சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு தோறும் மாங்காய் விளைச்சலில் படிப்படியாக சரிவு ஏற்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதூர், சிங்கம்புணரி, காரைக்குடி, காளையார்கோவில், திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஆயிரக்கணக்கான மாமரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆண்டு தோறும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் பூக்கத் தொடங்கும். மரங்களிலிருந்து தொடர்ந்து மாம்பிஞ்சுகள், காய்கள் என விற்பனை செய்யப்படும் மார்ச் இறுதியில் மாம்பழத்தின் சீசன் தொடங்கி விடும். இந்த ஆண்டு மாங்காய் விளைச்சலில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கூடுதல் மழை பெய்தாலும் தொடர்ந்து கடுமையான பனியால் மரங்களில் இருந்த பூ மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து வருகின்றன.

இதனால் மரங்களில் பூ மற்றும் பிஞ்சுகள் குறைவாகவே உள்ளன. உழவர் சந்தை மற்றும் கிராமங்களில் உள்ள கடைகளில் மிகக்குறைவான அளவிலேயே இம்மாவட்டத்தை சேர்ந்த மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன.  பழக்கடை மற்றும் வாரச்சந்தைகளில் விற்கப்படும் மாங்காய்கள், வெளி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையாகும். இவைகளும் குறைவான அளவிலேயே விற்பனைக்கு வந்துள்ளன.  இம்மாவட்டத்தில் உள்ள நாடு மற்றும் கிரேப் மரங்கள் தற்போது காய்க்க தொடங்கியுள்ளன. ஆனால் குறைவான பிஞ்சுகளே மரத்தில் உள்ளதால் இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் 80 சதவீம் கிரேப் எனப்படும் ஒட்டு ரக வகையை சேர்ந்த மா மரங்களே அதிகம். 25ஆண்டுகளுக்கு அதிகமான வயதுடைய நாட்டு மரங்களின் மாங்காய்கள் பழங்களாக இல்லாமல் ஊறுகாய் உள்ளிட்ட பயன்களுக்காக காய்களாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை மரங்களும் தற்போது குறைந்து வருகிறது. இதனால் முழுக்க கிரேப் வகை மாம்பழங்கள் மட்டுமே இங்கு விளையும் நிலை உள்ளது. கிரேப் வகை மரங்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை மட்டுமே நல்ல விளைச்சல் தரக்கூடியது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் போதிய தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கடும் வெப்பத்தால் பூக்களில் பூச்சி ஏற்படுவது, கடும் பனி உள்ளிட்டவைகளால் அதிகமான பூக்கள் உதிர்ந்துவிட்டன.  இதனால் போதிய காய்ப்பு இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தாலும் கடந்த மூன்று மாதங்களாக இருந்த கடுமையான பனியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: