நெடுஞ்சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

காளையார்கோவில், மார்ச் 10: காளையார்கோவில் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள சில மரங்கள் பட்டுப்போன நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பெரிய மரங்கள் உள்ளன. அவற்றில் காளையார்கோவிலில் இருந்து தொண்டி செல்லும் ரோட்டிலும் சிவகங்கை செல்லும் வழியில் நடுவாழி கிராமம் அருகில் மற்றும் பரமக்குடி செல்லும் பொருசடி உடைப்பு பகுதியில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில், எப்பொழுது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் அப்பகுதியில் மூன்று தனியார் பள்ளிகள் உள்ளன. காலை, மாலை வேலைகளில் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்திலும், நடந்தும் அதிகமான குழந்தைகள் சென்று வருகின்றனர். மரங்கள் முறிந்து பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு  முன்பு பட்டுப்போன மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: