14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் குமரியில் பஸ்கள் ஓடுமா?

நாகர்கோவில், மார்ச் 10: ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க கோரி, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்குகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்ைதயை உடனே ெதாடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். குமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் இந்த காத்திருப்பு போராட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் போக்குவரத்து கழக தொமுச பொது செயலாளர் சிவன்பிள்ளை தலைமையில் நேற்று காலை நடந்தது. தொமுச நிர்வாகிகள் ஆதித்தன், பால்ராஜ், சி.ஐ.டி.யு. லியோ, ஸ்டீபன் ஜெயகுமார், ஏ.ஐ.டி.யு.சி. நாகேந்திர பிள்ளை, மாடசாமி, எச்.எம்.எஸ். நடராஜன், மகேஷ்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளம் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. பின்னர் தொமுச பொது செயலாளர்  சிவன்பிள்ளை கூறுகையில், 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பல கோரிக்கைகளை தமிழக அரசு இன்னும் நிறைவேற்ற வில்லை. இது தொடர்பான பிரச்சினை, தற்போது தொழிலாளர்கள் நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்குவது தொடர்பான எந்த முயற்சியும் தமிழக அரசு எடுக்கவில்லை. தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்களை வஞ்சித்து வருகிறார்கள். எனவே 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்குகிறது. தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் நடக்கும். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். அந்தந்த சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பெருமளவில் தொழிலாளர்கள் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

பஸ்கள் ஓடுமா? :  அரசு போக்குவரத்து கழகத்தில் பணியில் உள்ள டிரைவர்கள், கண்டக்டர்களும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதால், அரசு பஸ்கள் இன்று இயங்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் 10ம் திருவிழாவாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்குவதால், சிறப்பு பஸ்களும் முறைப்படி இயங்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Related Stories: