திருவட்டார் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 2000 வாழைகள் நாசம்

குலசேகரம், ஏப்.28 : திருவட்டார் சுற்று வட்டார பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் வேளைகளில் மட்டுமல்ல, இரவிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் திருவட்டார், குலசேகரம் பகுதிகளில் கடந்த இரு நாட்களுக்கு முன், பலத்த மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவட்டார் அருகே தெற்றிகோடு பகுதியில் தாசையன் என்ற விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்திருந்தார். இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் இருந்தது.

கடும் வறட்சியிலும் தண்ணீர் இறைத்து பாதுகாத்து வந்தார். அடுத்த இரண்டு மாதத்தில் வாழைத்தார் அறுவடை செய்யும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்தன. இதில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று திருவட்டார் அடுத்த கொல்வேல் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 2 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ரப்பர் நடவு செய்த இடங்களில் ஊடுபயிராக 1500க்கும் மேற்பட்ட வாழைகள் நட்டு இருந்தார். சூறை காற்றில் 1200 க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம் ஏற்பட்டது.

The post திருவட்டார் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 2000 வாழைகள் நாசம் appeared first on Dinakaran.

Related Stories: