விமான நிலைய விரிவாக்க பணி நிலம் அளவீடு பணிக்காக சென்ற குழுவிற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

காடையாம்பட்டி, மார்ச் 6: விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணிக்காக அளவீட்டிற்காக சென்ற அதிகாரிகள் குழுவிற்கு எதிர்ப்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி கிராமங்களிலிருந்து சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக நிலம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து நிலம் எடுப்பு தனி தாசில்தார்கள், நிலம் அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று தும்பிப்பாடி கிராமத்திற்கு நிலம் அளவை பணிக்காக சென்றனர்.

அப்போது, அவர்களை கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நிலம் விற்பனை மற்றும் கிரயம் செய்வதை அரசு தடை செய்துள்ளது. எனவே, நில மதிப்பீடு 30 ஆண்டுக்கு முந்தையதாக உள்ளது. அதனால், விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கப்படும் பக்கத்து கிராமத்தின் நில மதிப்பீட்டுடன் ஒப்பிட்டு, இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், நிலத்திற்கான மதிப்பீட்டை கூறிவிட்டு அளந்து கொள்ளுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு பணி நடைபெற்றது. ஆனால், தற்போதைய நில மதிப்பீட்டை கொடுக்காவிட்டால் நிலத்தை வழங்க மாட்டோம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: