உரிமம் பெறாத குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேனியில் குடிநீர் கேன் விலை எகிறியது

தேனி, மார்ச் 5: நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் கேனில் நிரப்பி விற்பனை செய்வதில் முறைப்படி உரிமம் பெறாத நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை தொடர்ந்து குடிநீர் கேன் விலை தேனியில் உயர்ந்துள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் கேன்களில் நிரப்பி வினியோகம் செய்யும் நிறுவனங்கள் பொதுப்பணித்துறையிடம் முறைப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய உரிமம் பெறாத குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் மீது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் சுமார் 19 குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதில் பொதுப்பணித்துறை மூலம் உரிமத்தினை பெரும்பாலான நிறுவனங்கள் பெறவில்லை. இதில் சில குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளுர் தரச்சான்று மட்டும் பெற்றுள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து உரிமம் பெறாத குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்து, உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர்.

இதனையடுத்து, தற்போது குடிநீர் கேன் உற்பத்தியின் அளவு பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தேனியில் கேன் ஒன்று ரூ.30 என இருந்ததை தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சில்லறை விற்பனையாளர்கள், சிறிய உணவு விடுதிகள் நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: