ஆத்ம நாயகி அம்மன் திருக்கல்யாண விழா

சிங்கம்புணரி, மார்ச் 4: சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் குன்றக்குடி ஆதினத்திற்கு உட்பட்ட ஆத்ம நாயகி அம்மன் ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசி திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது. கோவிலின் உள்ளே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஆத்ம நாயகி அம்மன் கோடீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் வேதங்கள் முழங்க ஆத்ம நாயகி அம்மனுக்கு மங்கலநாண் பூட்டும் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ஆத்ம நாயகி அம்மன் பல்லக்கிலும் ருத்ரகோடீஸ்வரர் யானை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 7ம் தேதி தேரோட்ட விழாவும், 8ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும்.

Related Stories: