பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் அகற்றம்

கும்பகோணம், மார்ச் 3: கும்பகோணம் பகுதியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை போக்குவரத்து போலீசார் அதிரடியாக அகற்றினர். மேலும் பேருந்து டிரைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கும்பகோணம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிகளவில் ஏர்ஹாரன் உபயோகிப்பதால் பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து காவல் துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்குவரத்து எஸ்ஐ வினோத் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காலை புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து துறை அலுவலகம் முன் பேருந்துகளில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள ஏர்ஹாரனை அகற்றினர். பின்னர் அனுமதியின்றி அதிகளவில் சத்தம் எழக்கூடிய ஏர்ஹாரனை உபயோகித்ததால் 10க்கும் மேற்பட்ட பேருந்து டிரைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  இனிவரும் நாட்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரனை உபயோகித்தால் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்ஐ வினோத் தெரிவித்தார்.

Related Stories: