சொத்து பத்திரத்தை ஏமாற்றியாக கூறி 3 பெண் குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெற்றோர்

சூலூர், மார்ச் 3:   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் பாப்பம்பட்டி பகுதியில் தங்கி ஒர்க்ஷாப் வேலைக்கு சென்று வருகிறார். இவரது பெண் குழந்தைகள் அதே ஊரில் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஆறுமுகம் லாரி வைத்து  சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். அப்போது இவர் அதே ஊரில்  ஏலச்சீட்டு நடத்தி வந்த  ஆதிகணேஷ் என்பரிடம் பழக்கம் ஏற்பட்டு அவரிடம்  4 லட்ச ரூபாய்  சீட்டு போட்டுள்ளார். சீட்டு பணம் எடுத்த நிலையில்  ஆறுமுகத்தால் சீட்டுபணம்  சரியாக கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. ஆதிகணேஷ் சீட்டு பணம் தருமாறு தொடர்ந்து  கேட்டுள்ளார். பணத்தை தர முடியாத நிலையில் ஆறுமுகம் தனது குடும்பத்திற்கு சொந்தமான நில பத்திரத்தை ஆதிகணேஷிடம் கொடுத்துள்ளார். பின்பு சில மாதங்களிலேயே ஆதிகணேசும் தொழில் நடத்த முடியாமல் தொழிலை நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆறுமுகத்தின் குடும்ப சொத்து பத்திரத்தை வேறு ஒருவரிடம் அடமானம் வைத்து பெருமளவு பணத்தை  ஆதிகணேஷ் வாங்கிக் கொண்டார் எனத் தெரிகிறது.  கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஆறுமுகம், ஆதிகணேஷை அணுகி தான் தரவேண்டிய பணத்தை  தருவதாகவும்  தனது பத்திரத்தைக்  திரும்ப தருமாறு கேட்டு பணத்துடன் ஆதிகணேஷை அணுகியுள்ளார். அப்போது ஆதிகணேஷ் அதிக பணம் கேட்டதால் அதிருப்தியடைந்த  ஆறுமுகம் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருதரப்பையும் அழைத்து போலீசார் சமாதானம் பேசியுள்ளனர்.

அதில் ஆறுமுகம் ஒரு மாத காலத்திற்குள் 5 லட்சம் ரூபாய் கொடுத்து பத்திரத்தை மீட்டுக் கொள்வது என பேசி முடிவு செய்யப்பட்டது. சமாதானப் பேச்சின்படி  நேற்று காலை ஆறுமுகம் தனது மனைவி பரமேஸ்வரியுடன் 5 லட்சம் பணத்துடன் காளப்பட்டியில் உள்ள பிரமுகரை அணுகி தனது பத்திரத்தைக் கேட்டுள்ளார். ஆனால், அவர் 10 லட்சம் ரூபாய் தந்தால்தான் பத்திரத்தைத் தருவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த ஆறுமுகம் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் தனது 3 பெண் குழந்தைகளுடன் சென்று ஆதிகணேஷ் வீட்டு முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். அருகிலிருந்தவர்கள் அவர்களைத் தடுத்தி நிறுத்தி சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: