துணை ஆட்சியருக்கு நெருக்கமான பெண் அதிகாரியின் சொத்து பட்டியல் தயாரிப்பு ராணிப்பேட்டையில் ₹1 கோடியில் புதுவீடு கட்டியதாக புகார் வேலூர் விஜிலென்ஸ் போலீசில் சிக்கிய

வேலூர், மார்ச்.2: வேலூர் முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியருக்கு நெருக்கமான பெண் அதிகாரியின் சொத்து பட்டியலை தயாரிக்கும் பணியில் விஜிலென்ஸ் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் ராணிப்பேட்டையில் ₹1 கோடியில் புது வீடு கட்டியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. வேலூர் முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியராக பணியாற்றி வந்த தினகரன். நேற்று முன்தினம் ₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானார். அவருடன் டிரைவர் ரமேஷ் என்பவரும் சிக்கினார். அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் மொத்தம் ₹76.64 லட்சம் ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. இதையடுத்து இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் துணை ஆட்சியருக்கு நெருக்கமான பெண் அதிகாரியின் விவரங்கள் மற்றும் சொத்து பட்டியல் தயாரிக்கும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது:

வேலூர் மாவட்டத்தில் துணைஆட்சியராக பணியில் சேர்ந்த நாள் முதல் அவர் எத்தனை பேருக்கு முத்திரைக்கட்டணம் தொடர்பான நிலங்களின் ஆவணங்கள் பார்த்து விடுவித்துள்ளார், அதற்கு ஒவ்வொரு இடத்துக்கும் எவ்வளவு தொகை நிர்ணயம் செய்து வைத்திருந்தார். அந்த இடத்தின் மதிப்பை வைத்து எத்தனை பேரிடம் லஞ்சமாக பணம் வசூல் செய்துள்ளார் என்பது போன்ற விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. மேலும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்திரை கட்டணம் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண் அதிகாரி தனித்துணை ஆட்சியர் தினகரனின் முக்கிய மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் துணை ஆட்சியருக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, அனைத்து பணிகளையும் முடித்து பணத்தை கறந்துள்ளார்.

முத்திரைக்கட்டணம் தொடர்பாக எந்த புகார் வந்தாலும், பெண் அதிகாரியே அதை கவனித்து வந்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு இவரே பணியை முடித்து வந்துள்ளார். பல்வேறு புகார்கள் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு கணக்கு பிரிவு துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளார். வேலூர் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய காலத்திலேயே ராணிப்பேட்டையில் ₹1 கோடியில் புதிய வீடு கட்டியுள்ளார். அரசின் அனுமதி பெற்றுதான் வீடு கட்டுப்பட்டுள்ளதா? அல்லது முறைகேடாக லஞ்ச பணத்தில் வீடு கட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்து வருகிறது.

இவரது சொத்து பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. தனித்துணை ஆட்சியரின் வீட்டில் ₹76 லட்சம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் அடிப்படையில், சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும், அதன் மதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: