சின்னமனூரில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படுவரா?

சின்னமனூர், பிப். 28: சின்னமனூரில் காலை, மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் பிரிவை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் நகராட்சி உள்ளது. இரண்டாம் நிலை நகராட்சியான இங்கு 27 வார்டுகள் உள்ளன. இந்த நகரைச் சுற்றி 14 கிராம ஊராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும், ஹைவேவிஸ் மேகமலை உள்ளிட்ட 7 மலைக்கிராமங்களும் உள்ளன. இப்பகுதியில் ஏற்படும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளை கண்காணிக்க சின்னமனூரில் காவல்நிலையம் உள்ளது. இந்த காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 4 சிறப்பு எஸ்ஐ, போலீஸ்காரர்கள் என 35க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், வாகனப் பெருக்கத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக நகரில் பஸ்நிலையத்திலிருந்து மார்க்கையன்கோட்டை பிரிவு, சீப்பாலக்கோட்டை பிரிவு, காந்தி சிலை பழைய பஸ்நிலையம் வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீரமைக்க போக்குவரத்து போலீசார் இல்லாததால் காலை, மாலை முக்கிய நேரங்களில் (பீக் அவர்ஸ்) வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்தும் ஏற்படுகிறது. குறிப்பாக நகரில் பஸ்நிலையம், தேரடி, மார்க்கையன்கோட்டை பிரிவு, சீப்பாலக்கோட்டை பிரிவு, காந்தி சிலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, அதை சீரமைக்காமல், போலீசார் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டுகின்றனர். எனவே, சின்னமனூர் காவல்நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையை தீர்க்கவும், போக்குவரத்து போலீசாரை நியமித்து, நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தவும் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்

Related Stories: