அறந்தாங்கி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அறந்தாங்கி, பிப்.28: கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் கோரி நேற்று அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 56 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், தற்போது அண்ணாமலை பல்கலைகழகத்தில் இருந்து பி.பி.ஏ பிரிவிற்கு 3 விரிவுரையாளர்களை அரசு நியமித்துள்ளது. ஏற்கனவே பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் புதிதாக விரிவுரையாளர்களை நியமனம் செய்வதால் தங்களது பணிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. கவுரவ விரிவுரையாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: