குமரி மாவட்டத்தில் 16,150 மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் விநியோகம்

நாகர்கோவில், பிப்.28:  குமரி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 150 மாணவ மாணவியருக்கு ₹6 கோடி 37 லட்சத்து 15 ஆயிரத்து 236 மதிப்பில் இலவச சைக்கிள் விநியோகத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் நேற்று தொடக்கி வைத்தார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்பி அரசு மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வரவேற்றார். குமரி மாவட்டத்தில் 141 அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 7473 மாணவர்கள், 8677 மாணவிகள் என்று மொத்தம் 16,150 பேருக்கு R6 கோடி 37 லட்சத்து 15 ஆயித்து 236 மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.விழாவில் இலவச சைக்கிள்களை மாணவ மாணவியருக்கு வழங்கி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசியதாவது:

 தமிழகத்தில் 2001ம் ஆண்டு முதல் இலவச சைக்கிள்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் மாணவிகளுக்கு மட்டும் வழங்கும் வகையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். பின்னர் அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் இந்த திட்டத்தை அரசு இன்றளவிலும் செயல்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் 2 அரசு கலை கல்லூரிகள், அரசு ஆயுர்வேத மருத்துவகல்லூரி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 50 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இங்கு மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆறு பேர் படிக்க வாய்ப்பு கிடைக்கும். நாகர்கோவில் எஸ்எல்பி அரசு பள்ளி தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இந்த பள்ளி கட்டிடத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பள்ளியில் எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும் தொல்லியத்துறை அனுமதி பெற்றாக வேண்டும். தொல்லியல்துறை அனுமதி பெற்று ரூ.3 கோடி நிதியுதவியுடன் இந்த பள்ளியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வசந்தகுமார் எம்.பி, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ, ஆவின் தலைவர் அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் ஜாண்தங்கம், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டு பேசினர். நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகனன் நன்றி கூறினார்.

‘எஸ்.எல்.பி பள்ளியை பாதுகாக்க வேண்டும்’

விழாவில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசுகையில், ‘பழமை வாய்ந்த எஸ்.எல்.பி பள்ளியை பார்க்கும் போது பல இடங்களிலும் ஓடுகள் உடைந்து காணப்படுகிறது. சுவர்களில் வெள்ளை அடிக்காத நிலை உள்ளது. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய இயலாது என்பதால், மாவட்ட கலெக்டரோ, டெல்லி சிறப்பு பிரதிநிதியோ இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்ற வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கட்டிடத்தை இனி காண்பது அரிது. எனவே இதை பராமரிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பள்ளியை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.டயரில் காற்றில்லாத சைக்கிள்கள்விழா முடிந்ததும் மாணவ மாணவியருக்கு சைக்கிள்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதனை மாலையில் மாணவர்கள் ஓட்டிச்சென்றனர். ஆனால் அந்த சைக்கிள்களில் டயர்களில் காற்று நிரப்பப்படவில்லை. மேலும் பல சைக்கிள்களிலும் வீல் முறையாக நகர முடியாத நிலை இருந்தது. இதனால் மாணவர்கள் அதனை கொண்டு செல்வதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related Stories: