அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள் விநியோகம்

கோவை, பிப். 26:  கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்களை ஓட்ட முடியாமல் மாணவர்கள் வீடு வரை தள்ளிக்கொண்டு சென்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சைக்கிள்களின் உதிரி பாகங்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் நடந்தது. இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் சைக்கிள்களில் உள்ள வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சைக்கிள்கள் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் மூலமாக கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய சைக்கிள்கள் பயன்படுத்த முடியாத மற்றும் பாதுகாப்பற்ற சைக்கிள்களாக உள்ளது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளிகளில் நேற்று மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த சைக்கிள்களில் உதிரிபாகங்கள் சரியாக பொருத்தவில்லை. டயர்கள், ெபடல்கள், சீட், செயின் உள்ளிட்டவை முறையாக பொருத்தவில்லை. இதனால், கழண்டு விழும் நிலையில் இருந்தது. சில சைக்கிள்களை மாணவர்களால் ஓட்ட கூட முடியவில்லை. மேலும், அனைத்து சைக்கிள்களின் டயர்களிலும் காற்று இல்லை. இதனால், மாணவர்கள் சைக்கிள் கடைகளுக்கு படையெடுத்தனர். ரூ.10 கொடுத்து சைக்கிள்களுக்கு காற்று அடித்தனர். இருப்பினும், கழண்டு விழும் உதிரிபாகங்களால் சைக்கிளை ஓட்ட முடியாமல் வீடு வரை பல கிலோ மீட்டர் மாணவ, மாணவிகள் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றனர். சில சைக்கிள் டயர்கள் சரியாக ெபாருத்தவில்லை.

இது போன்ற சைக்கிள்களை வாகனங்கள் வைத்து மாணவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “இந்த சைக்கிள்களை சீரமைக்க ரூ.400 முதல் 600 வரை செலவாகும் என கடைக்காரர்கள் தெரிவித்தனர். ஓட்ட முடியாத அளவிற்கு சைக்கிளை அளித்துள்ளனர். காற்று அடிக்க காசு இல்லை. டயர், வீல், செயின் என அனைத்தும் தரமற்ற முறையில் பொருத்தியுள்ளனர். இதனால், சைக்கிள் ஓட்ட முடியவில்லை. எனவே, சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்கிறோம். இந்த சைக்கிள்களை பள்ளியில் சீரமைத்து தரவேண்டும்” என்றனர்.

Related Stories: