33 சதவீதம் ஆசிரியர் பற்றாக்குறையால் தடுமாறும் அவலம் அரசுப்பள்ளிகள் கல்வித்தரத்தில் பின்தங்கிய தமிழகம் மத்திய அரசின் இடைநிலைக்கல்விக்குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வேலூர், பிப்.21: 33 சதவீதம் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், நாட்டில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தில் தமிழகம் 48 புள்ளிகளுடன் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசின் இடைநிலைக்கல்வி வாரிய ஒப்புதல் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 24,321 அரசு தொடக்கப்பள்ளிகள், 5,025 அரசு நிதியுதவி பள்ளிகள், 6,303 தனியார் ஆங்கிலவழி பள்ளிகள் என மொத்தம் 35,649 தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.அதேபோல், 6,966 அரசு நடுநிலைப் பள்ளிகள், 1,513 நிதியுதவி நடுநிலைப் பள்ளிகள், ஆயிரத்து ஒன்று தனியார் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 9,480 பள்ளிகள் உள்ளன. இதில் 6,966 நடுநிலைப்பள்ளிகளில் 8.46 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அதேநேரத்தில், அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 31 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த நியதி தமிழகத்தில் இல்லை என்றும், தமிழ்நாட்டில் உள்ள 3ல் 1 பங்கு அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை என்றும், பெரும்பாலான கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே 5 பாடங்களை கற்பிக்கும் நிலை உள்ளது என்றும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.இதனால் அரசுப்பள்ளி மாணவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தாய்மொழி வாசிப்புத்திறன், பிற பாடங்களின் கற்கும் திறன் போதிய அளவில் இல்லை.

Advertising
Advertising

இதனால் அரசு பள்ளிகளுக்கான கல்வி தர நிர்ணய பட்டியலில் மொத்தம் 180 புள்ளிகளுக்கு தமிழகம் வெறும் 48 புள்ளிகளை மட்டுமே பெற்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் ஒப்புதல் குழு கூட்டத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு அரசு நடுநிலைப்பள்ளிகளில் 33 சதவீதம் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே காரணம் என்றும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாட ஆசிரியர்களின் எண்ணிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகரிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள இந்த தகவல் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த விவரம் உண்மையானதுதான். குறிப்பாக கிராமப்புற பள்ளிகள்தான் இத்தகைய இக்கட்டான நிலையில் சிக்கி தவித்து வருகின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, நீலகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் பல நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.எல்லா பாடங்களையும் இவர்களே நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, அடித்தள கல்வியை மேம்படுத்தினால் மட்டுமே உயர்கல்வியில் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை பெற முடியும். எனவே, தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் மேலும் தாராள போக்குடன் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகளுக்கான தர நிர்ணய பட்டியலில் நாம் முன்னேற்றத்தை காண முடியும்’ என்றனர்.

Related Stories: