சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜமாத்துல் உலமா சபை வலியுறுத்தல்

உத்தமபாளையம், பிப். 19: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உத்தமபாளையத்தில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உத்தமபாளையம் கோட்டைமேட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், வட்டார ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் முகமது இஸ்மாயில் உலவி தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இமாம் முகமதுமீரான் உஸ்மானி இறைவசனம் ஓதினார். ஆலீம் அகமது கபீர் வரவேற்றார். தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவர் ஆலீம் சையதுஅகமது, பெரிய பள்ளிவாசல் இமாம் மதார்மைதீன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் அப்துல்லாபத்ரி, பாப்புலர் பிரண்ட் ஏரியா தலைவர் ஹாரூண் ஷரீப், மதுரை டவுன்ஹால் பள்ளிவாசல் இமாம் முகமதுரபீக் ஆகியோர் பேசினர். இதனை அடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கு எதிராக இந்திய மக்களின் விருப்பம் இல்லாமல் திணிக்கப்படும் சி.ஏ.ஏ. என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய கருப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இச்சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உதவி ஆணையர் கபில்குமார், ஆணையர் தினகரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: