சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க கன்னியாகுமரியில் படகு டிக்கெட் ஆன்லைன் விற்பனைக்கு பரிந்துரை

கன்னியாகுமரி, பிப்.19: கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு டிக்கெட் ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் மத்திய அரசின் சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ₹3.81 கோடி செலவில் 2வது கட்டமாக வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. சூரிய உதயத்தை பார்க்கும் இடத்தை அழகு படுத்துதல், கடலில் படித்துறை அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை நேற்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அலைகள் அதிகம் எழுந்துவரும் பாறை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சனல்குமார், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ்,கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.கோடை விடுமுறைக்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கலெக்டரிடம் வியாபாரிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கன்னியாகுமரி கடற்கரையில் செயற்கையாக போடப்பட்டுள்ள கருங்கற்கள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் மத்திய அரசு நிதி ₹3 கோடியே 80 லட்சம் செலவில் திட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இங்கு நடைபாதை, மின்விளக்கு, சுற்றுலா பயணிகள் உடைமாற்றும் அறை, சிசிடிவி கேமரா, கடல் அலைகளை சுற்றுலா பயணிகள் அமர்ந்து ரசிக்கும் வகையில் அரங்கம் உள்பட 9 பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் அனைத்தையும் கோடை காலத்திற்கு முன்பாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். கடல் அலைகளின் வேகம் அதிகமாக உள்ளதால் கடற்கரை பகுதியில் பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை, டிசைன் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலம் தமிழக முதலமைச்சர் அறிவித்த திட்டமாகும். மேலும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, நிர்வாகத்திடம் ஆன் லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய பரிந்துரை செய்துள்ளோம். இதுகுறித்து பூம்புகார் நிர்வாகம் முடிவெடுத்த பிறகு ஆன் லைன் மூலம் டிக்கெட் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: