சாக்கடையை தூர்வாரக்கோரி சாலை மறியல்

கோவை, பிப் 18: கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கலிங்கா தெருவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் கடந்த 10 ஆண்டுக்கும்  மேலாக தூர்வாரப்படவில்லை. இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல், நிரம்பி தெருவில் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஒப்பணக்கார வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்த வெரைட்டில்ஹால் ரோடு போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று  மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்   பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாக்கடை தூர்வார மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: