வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை

ஈரோடு, பிப். 17: படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறியுள்ளதாவது: தமிழக அரசு சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி மாதந்தோறும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.400ம், பட்டதாரிகளுக்கு ரூ.600ம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000ம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

Advertising
Advertising

 இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாக பள்ளியில் படித்து தோல்வி அடைந்திருக்க வேண்டும்) அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு ஆண்டு பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 31.12.2019 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்க கூடாது (அஞ்சல் வழியில் படிக்கலாம்). விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலை வாய்ப்பிலும் ஈடுபட்டிருக்க கூடாது.

இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் இது போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வரும் 28ம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வழங்கலாம். மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாமல் 2019-20ம் நிதியாண்டிற்கு சுயஉறுதி ஆவணம் அளிக்காதவர்களும் 28ம் தேதிக்குள் சுயஉறுதி ஆவணம் அளித்தால் தொடர்ந்து உதவித்தொகை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: