மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க 920 பழங்குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பு

ஈரோடு, பிப். 17: ஈரோடு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க 920 பழங்குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்று தரப்படுகிறது. இதில், தண்டனை காலம் முடிந்து அல்லது ஜாமீனில் வெளியே வந்தவர்களை தனிப்பிரிவு மற்றும் கிரைம் போலீசார் மூலம் பட்டியலிட்டு கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்படுவர். இவர்கள், தேர்தல், தலைவர்கள் வருகை, முக்கிய திருவிழா, பண்டிகைக்காலங்களுக்கு முன்பாக அவர்களின் நன்னடத்தை குறித்து ஆய்வு செய்யப்படும்.

Advertising
Advertising

இதில், அவர்கள் குறிப்பிட்ட மாதத்திற்கு ஒரு முறை ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தப்படுவார்கள். அதில், யாரேனும் விதிமுறை மீறி இருந்தால் ஆர்.டி.ஓ.வின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை குறைத்திடவும், தடுக்கவும் பழங்குற்றவாளிகள் 920 பேர் பட்டியலிட்டு, அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து எஸ்.பி.சக்திகணேசன் கூறுகையில், ‘‘பழங்குற்றவாளிகள் மட்டும் அல்லாது தற்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களையும் கண்காணித்து வருகிறோம். அதில், 920 பேர் பழங்குற்றவாளிகளாக உள்ளனர்.

அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குற்றச்செயல்களை தடுத்திடும் வகையில் 920 பேரின் பெயர், முகவரி, தற்போது என்ன செய்து வருகிறார்கள்?, குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் யார்? போன்ற விவரங்களை ஆவணமாக தயார் செய்து, அதனை கணினியில் பதிவு செய்துள்ளோம். நன்னடத்தை விதிமுறைகளின் கீழ் ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்த உள்ளோம். இதில், நன்னடத்தை விதிமுறை மீறியவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள், என்றார்.

Related Stories: