ஆவடி அருகே மிட்டினமல்லியில் குப்பை அகற்றுவதில் மெத்தனம் துர்நாற்றத்தில் மக்கள் கடும் அவதி

ஆவடி, பிப்.13 : ஆவடி மாநகராட்சி, மிட்டினமல்லி பிரதான சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். ஆவடி மாநகராட்சி, மிட்டினமல்லி பிரதான சாலையில் குடியிருப்புகள், பள்ளி கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மேலும், இங்குள்ள காந்தி சாலை, பஜார்  உள்ளிட்ட பகுதிகளில்  தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஆட்டோக்களில் வந்து தெருக்கள், வீடுகளில் சேரும் குப்பைகளை அகற்றி வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் சமீப காலமாக குப்பைகளை அகற்ற  துப்புரவு ஊழியர்கள் சரி வர வருவது இல்லை. இதனால் பல தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பல்வேறு வகையானநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மிட்டினமல்லி பகுதியில் குடியிருப்புகள், தெருக்களில் குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. இங்குள்ள பிரதான சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்துகிடக்கிறது. மேலும், பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்ட பெரும்பாலான குப்பை தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்திவிட்டு, முக்கிய சாலை சந்திப்புகளில் மட்டும் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர். இந்த தொட்டிகளிலும் குப்பைகள் நிறைந்து  சாலையில் குவிந்து கிடக்கிறது.  இதனால், குடியிருப்போர் அப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் காற்றில் பறந்தும் அந்த பகுதியில் உள்ள மாடு, நாய்கள் கிளறுவதாலும் குப்பைகள் சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன. இதோடு மட்டுமல்லாமல், அச்சாலைகளில் வேகமாக வாகனங்கள் செல்லும் போது குப்பை கழிவுகள் காற்றில் பறந்து கடைகள், வீடுகளுக்குள் விழுகிறது. மேலும், சாலை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும், பல நாட்களாக அகற்றாத குப்பைகள்  மக்கி வருகின்றன. இதில் இருந்து, கொசுக்கள் உற்பத்தியாகிறது.  துப்புரவு ஊழியர்களின் அலட்சிய போக்கால் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாகவே உள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

எனவே, ஆவடி மாநகராட்சி  அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மிட்டினமல்லி பகுதிகளில் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

முடங்கிய பேட்டரி ஆட்டோக்கள்

கடந்த ஓராண்டாக மாநகராட்சியில் 130க்கு மேற்பட்ட  பேட்டரி ஆட்டோக்கள் மூலம் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதில் 50க்கு மேற்பட்ட ஆட்டோக்கள்  பழுது ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் குப்பை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி பகுதியில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.

Related Stories: