‘உங்களை மறக்க முடியாது’ நோய்வாய்ப்பட்ட ஆசிரியையை நேரில் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு

நாகர்கோவில், பிப்.12: தமிழக தீயணைப்பு துறை டிஜிபியாக பணியாற்றி வருபவர் சைலேந்திரபாபு. இவர் குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர். குழித்துறை அருகே உள்ள விளவங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பை முடித்தார். குமரி மாவட்ட பகுதிகளுக்கு வரும்போது தான் பயின்ற பள்ளி, அது தொடர்பான விஷயங்களை பற்றி பேசும் வழக்கம் உடையவர். மாணவ மாணவியருக்கு தன்னம்பிக்கை கருத்துகளை பகிர்வதும், நிகழ்வுகளில் கலந்துகொண்டு தன்னம்பிக்கை உரையாற்றுவதும் வழக்கம். அண்மையில் குமரி மாவட்டம் வந்த இவர் விளவங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் தனக்கு பாடம் எடுத்த ஆசிரியை ஒருவர் தற்போது நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக  இருப்பதை அறிந்து அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி. பம்பரமாக வகுப்பறையில்  சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். சைலேந்திரபாபு ஆசிரியர்களை மதிக்கும் பாங்கினை சமூகவலைதளவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories: