சத்தியமங்கலம் அருகே கே.ஜி.பி.வி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சத்தியமங்கலம், பிப். 12:  சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கே.ஜி.பி.வி) என்ற பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் இப்பள்ளியை ரீடு தொண்டு நிறுவனம் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் கல்வி மட்டுமில்லாமல், யோகா, கராத்தே, சிலம்பம், கணினி, தையல் போன்ற பல பயிற்சிகளும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கே.ஜி.பி.வி உண்டு உறைவிட பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் சந்திராயன் ஏவுகணை, மின் ஆற்றல், புவி ஈர்ப்பு விசை, காந்த விசை, நியூட்டன் விதி, பிதாகரஸ் தேற்றம், தொலைநோக்கி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், சூரிய மின்தகடுகள், தானியங்கி மோட்டார் போன்ற 70க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் செய்யப்பட்டு அதன் இயக்கம் குறித்து விளக்கமளித்தனர்.

இதில் முன்னதாக அறிவியல் கண்காட்சியை ரீடு  இயக்குனர் கருப்புசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர். மேலும் இந்த அறிவியல் கண்காட்சியில் திட்ட மேலாளர் மகேஸ்வரன், பள்ளி அலுவலர் கிருஷ்ணவேணி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் வட்டார மேற்பார்வையாளர் (பொ) மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் வகிதாபேகம், சண்முகவடிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து உபகரணங்கள் மற்றும் ஏற்பாடுகளை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: