புல்லரம்பாக்கம் பகுதி பூண்டி ஏரிக்கரை ஆக்கிரமித்து விவசாயம்

திருவள்ளூர், பிப். 11: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில், பூண்டி எரிக்கரையையொட்டி உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களை, சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், புல்லரம்பாக்கம் பகுதியில், சாலையோரம் பூண்டி எரிக்கரை உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தனர். இதையடுத்து, அங்கு, ‘’பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். அத்துமீறி யாரும் நுழையக்கூடாது’’ என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உத்தரவையும் மீறி ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த பருவத்தில் நெல் விவசாயம் செய்தனர்.

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசு சட்டம் இயற்றியும், இதை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது நெல் அறுவடையும் முடிந்து, மீண்டும், நெல் பயிரிடும் பணியில் ஆக்கிரமிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர், இதற்கென பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களிடம் குத்தகை போன்று குறிப்பிட்ட தொகையை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நாற்று நடுவதற்கு முன் துவக்கத்திலேயே ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இடத்தை சுற்றிலும் முள்வேலி அமைத்து, அங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: