நூற்றாண்டு கண்ட மதுரை கலெக்டர் அலுவலக கட்டிடம் புதுப்பொலிவு: ரூ.2.30 கோடியில் புனரமைப்பு பணி தீவிரம்..!

மதுரை: தமிழ்ச்சங்கம் வளர்த்த நகரம் மதுரை. இது தொன்மையான நகரமாக இன்றும் திகழ்கிறது. இங்கிலாந்தில் இருந்து வாணிபம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியும் மதுரையை ஆட்சி செய்தது. இவர்கள் ஆட்சியில்தான் மன்னர் ஆட்சியை அகற்றி இவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் கலெக்டர் ஆட்சி உருவானது. கி.பி. 1790ல் செப்.6ம் தேதி மைக்கேல் லியோ மதுரையின் முதல் கலெக்டராக பதவி ஏற்கிறார். இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் மதுரை நகரம் வந்தவுடன், புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட ஆங்கிலேயர்கள் தீர்மானத்தனர். அப்போது மதுரையின் 107வது கலெக்டராக இருந்த பாடிசன் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். இப்பணி 108வது கலெக்டராக இருந்த ரெய்லியில் தொடர்ந்து பின் இதே பாடிசன் 109வது கலெக்டராக பதவி ஏற்று புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை 1916ல் திறந்து வைத்துள்ளார். இந்த கட்டிடம், கிரானைட் கற்களால் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. பல அழகிய வேலைப்பாடுகளுடன் 4 மர மாடிப்படிகள், கல்லை அழகிய பல்வேறு வடிவத்துடன் செதுக்கி கட்டிடம் கட்டியுள்ளனர். 106 ஆண்டுகளாகியும், கட்டிடத்தில் விரிசல், சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2013ல் இந்த கட்டிடத்தில் முதல்தளத்தில் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் எந்த சேதமும் ஏற்படாமல், இன்றும் இரும்புபோல் கம்பீரமாக நிற்கிறது. நூற்றாண்டு கண்டுள்ள இந்த கட்டிடத்தை, தமிழக அரசின் புராதன கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு தற்போது கையில் எடுத்துள்ளது. இக்கட்டிடம் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. கட்டிடத்தின் மேல்தளம், முதல்தளம் மற்றும் கட்டிடத்தில் சிதிலமடைந்த அனைத்து பகுதியையும் புனரமைப்பு செய்யும் பணி கடந்த ஜூனில் துவங்கி நடந்து வருகிறது. கட்டிடத்தில் மழைநீர் மேல்தளத்தில் தேங்காமல், உடனே கீழே வந்து விழும்படி மேல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் அலுவலகத்திற்காக பல்வேறு பிரிவு அலுவலகம் இக்கட்டிடத்தில் முன்பு அமைக்கப்பட்டது. இதற்காக ஆங்காங்கே தடுப்புச்சுவர் எடுத்து, தங்கள் இஷ்டம் போல், அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தினர். கலெக்டர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாறியதை தொடர்ந்து, பழைய கட்டிடத்தில் இருந்த அனைத்து தடுப்புச்சுவர்களும் அகற்றப்பட்டன. இதன்மூலம் இக்கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு அறையும் 4.5 மீட்டர் உயரம் கொண்டது. அறையின் கதவு, ஜன்னல், கட்டிடத்தின் மேற்கூரையில் (லாகடம்) சுத்தமான தேக்குக்கட்டையால் அமைக்கப்பட்டது. கட்டிடத்தின் கீழ்தளத்தில் 20 அறைகளும், முதல்தளத்தில் 19 அறைகள் என மொத்தம் 39 அறைகள் உள்ளன. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்த அறைகளை வடிவமைத்தார்களோ, அதுபோல் தற்போது கட்டிடம் மீண்டும் உருமாறி வருகிறது. இதனால், கட்டிடத்தின் முதல்தளம் மிகவும் பிரமாண்டமாக பெரிய அளவிலான அறைகளாக காட்சி தருகிறது. அங்கிருந்து மரநிலைகள், ஜன்னல்கள் சேதம் அடைந்திருந்தவற்றை மீண்டும் புதுப்பித்து, சுத்தம் செய்யப்பட்டு, அதே நிலையில் வார்னீஷ் பாலீஷ் அடிக்கப்படுகிறது. அதேபோல், கட்டிடத்தில் உள்ள கற்தூண்கள், சுவர்களில் உள்ள அழுக்குகள் காற்று, தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வார்னீஷ் பாலீஷ் அடிக்கப்படுகிறது. முதல்தளத்தில் பணிமுடிந்து, கீழ்தளத்தில் பணிகள் துவங்க உள்ளது. பழைய அதே கலைநயத்துடன் கட்டிடம் மீண்டும் உயிர்ப்பித்து புதுப்பொலிவு அடைந்துள்ளது….

The post நூற்றாண்டு கண்ட மதுரை கலெக்டர் அலுவலக கட்டிடம் புதுப்பொலிவு: ரூ.2.30 கோடியில் புனரமைப்பு பணி தீவிரம்..! appeared first on Dinakaran.

Related Stories: