மத்திய சிறை இடமாறுமா?

கோவை, பிப்.11:  கோவை மத்திய சிறை இடமாற்றம் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்திற்கு உயிரியல் பூங்கா அமைக்கும் முயற்சியும் தாமதமாகி வருகிறது. கோவை மத்திய சிறை கடந்த 1872ம் ஆண்டு துவக்கப்பட்டது. 167 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த சிறையில் வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்தார்.  148 ஆண்டு கடந்த பெருமை பெற்ற இந்த சிறையில் 2,208 பேரை அடைக்க இருப்பிட வசதியுள்ளது. தற்போது சிறையில் 1,840 பேர் உள்ளனர்.போராட்ட காலங்களில் அதிக நபர்களை அடைக்க போதுமான அறை  வசதி கிடையாது. நகரின் மையப்பகுதியில் அதிக காலி இடங்களுடன் உள்ள இந்த சிறையை மாற்ற கடந்த 2010ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இங்கே 46 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவும் கிடப்பில் இருக்கிறது.

கோவை சிறையை 630 ஏக்கர் பரப்பு இடவசதியுள்ள வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கின் கடைசி எல்லைக்கு மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டது. அங்கே மேன்சன், விடுதிகளுக்கான கட்டமைப்புடன், நீண்ட சுற்றுசுவருடன் பிரமாண்ட சிறை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம், சிறை கட்ட இடம் வழங்க ஒப்பு கொண்ட போதிலும் சிறை மாற்றும் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டில் சிறை இடம் மாற்றம் செய்ய ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணி துவங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. கோவை நகரில் உள்ள பஸ் ஸ்டாண்ட்டுகளையும், லாரி பேட்டையையும் வெள்ளலூருக்கு மாற்றும் போது சிறையும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கிய நிலையில் சிறை மாற்றும் திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிறையை இடம் மாற்றம் செய்தால் நகரில் பல்வேறு திட்ட பணிகளுக்கு இடத்தை பயன்படுத்தலாம். கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘ ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி உயிரியல் பூங்காவை சிறை வளாகத்தில் உள்ள காலியிடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 36 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த இடத்திற்கு மாற்ற வெள்ளலூரில் காலியிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தற்போது பூங்கா செயல்படும் 4.5 ஏக்கர் இடம் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளது. இந்த பூங்காவை மூட சொல்லி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டது. எங்களது கோரிக்கையை ஏற்று கால அவகாசம் பெறப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவை இடம் மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திடம் இருந்து 45 ஏக்கர் நிலம் பெற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது, ’’ என்றனர். சிறை நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, ‘‘ சிறையை இடம் மாற்ற செய்வதற்கான எந்த திட்டம் தொடர்பாக எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது. அரசு அறிவிப்பு வந்தது, அதற்கு பிறகு என்ன நிலை என எங்களுக்கு தெரியவில்லை. வெள்ளலூரில் சிறை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டதா என தெரியவில்லை, ’’ என்றனர்.

Related Stories: