பா.ஜ. நிர்வாகியை கொலை செய்த முக்கிய குற்றவாளி போலீசில் திடுக்கிடும் தகவல்

திருச்சி, பிப்.7: திருச்சி பா.ஜ நிர்வாகியை கொலை செய்த முக்கிய குற்றவாளி போலீசில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு (40). பாலக்கரை பகுதி பாஜ மண்டல செயலாளர். காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்த இவர் கடந்த மாதம் 27ம் தேதி காலை காந்தி மார்க்கெட் 6ம் எண் கேட்டில் வாகன வசூலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏர்போர்ட் பிலிக்கான் கோயில் தெருவை சேர்ந்த பாபு என்ற மிட்டாய் பாபு(20), அவரது நண்பர் ஹரிபிரசாத் (25) ஆகியோர் அரிவாளால் விஜயரகுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் சென்னையில் பதுங்கி இருந்த மிட்டாய் பாபு, ஹரிபிரசாத் ஆகியோரை தனிப்படை போலீசார் 29ம் தேதி கைது செய்து திருச்சி கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் வரகனேரி யாசர் (எ)முகமதுயாசர் (19), சுடர்வேந்தன் (19), சஞ்சய் (எ) சச்சின் (19) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், விஜயரகுவின் மகளும் மிட்டாய்பாபுவும் காதலித்து வந்துள்ளனர். இதனால் மகளை விஜயரகு கண்டித்தார். மேலும் மிட்டாய்பாபுவை பல முறை விஜயரகு கண்டித்து உள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே போலீசிலும் புகார் செய்தார். அடிக்கடி போலீசில் புகார் கூறி தன்னை சிறைக்கு அனுப்பிய விஜயரகு மீது மிட்டாய் பாபு கோபத்தில் இருந்துள்ளார். இதற்கு முன் விஜயரகு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளார். அவர் மீது புகார் கூறியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் முன்விரோதத்தில் அவரை கொலை செய்ததாக மிட்டாய்பாபு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் காந்திமார்க்கெட் போலீசார் 6 நாட்கள் கஸ்டடி கேட்டு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி 6 நாட்கள் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து மிட்டாய் பாபுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளதாக போலீசார் கூறினர்.

Related Stories: