மருதாநதி வடக்கு, தெற்கு வாய்க்காலில் 20 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கவில்லை வேளாண்துறை முகாமில் விவசாயிகள் குற்றச்சாட்டு

பட்டிவீரன்பட்டி, பிப்.7: மருதாநதி வடக்கு, தெற்கு வாய்க்காலில் 20 ஆண்டுகளாக தண்ணீர் திறந்துவிடவில்லை என, வேளாண்துறை முகாமில் விவசாயிகள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் 7 துறைகள் பங்கேற்ற வேளாண்மை நவீனபடுத்துதல் திட்ட முகாம் நடைபெற்றது. அய்யம்பாளையம் பேரூராட்சி மன்ற அரங்கில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனைத்துறை ஆகிய 7 துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள், ‘‘இந்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்ற இத்துறை அதிகாரிகள் வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். இந்த நல்ல திட்டத்தை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கிராம வளர்ச்சிக்கு உதவிடவேண்டும். விவசாயம் செழித்தால் தான் கிராமம் வளர்ச்சி பெறும். 1990ம் ஆண்டு வருவாய் துறை வரைபடத்தின்படி காணாமல் போன குளங்கள், ஆறுகள் இருந்தால் அதனை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு மானியத்துடன் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் மோட்டார்கள், சோலார் பம்புகள், தானியங்களை உலர வைக்க சிமெண்ட் உலர்களம், பண்ணை குட்டைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ளது’’ என தெரிவித்தனர்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், ‘‘மருதாநதி அணை அடிவாரத்தில் வடக்கு மற்றும் தெற்கு வாய்க்காலை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்காலும், தொடர்ந்து தண்ணீர் விடாமல் ஒவ்வொரு ஆண்டும் புறக்கணிக்கப்படுவதாலும் இரண்டு வாய்க்கால்கள் மட்டுமின்றி இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் வறண்டு வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. 20 ஆண்டுகளாக தண்ணீர்விடவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு வாய்க்காலில் மட்டும் 1 நாள் சம்பிரதாயத்திற்காக திறந்தவுடன் அடைத்துவிட்டனர். தற்போது அணை இரண்டு முறை நிரம்பியும் இந்த இரண்டு பிரதான வாய்க்கால்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இந்த வாய்க்காலில் தண்ணீர் விட்டால் 10 கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்சனை தீரும். இந்த அணையிலிருந்து மணல் கடத்த தெரிந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பற்றி கவலை இல்லை’’ என்று தெரிவித்தனர். இதனால் முகாமில் சலசலப்பு ஏற்பட்டது. முகாமில் துணை வேளாண்மை இயக்குனர் ஞானசேகரன், மீன் வளத்துறை உதவி ஆய்வாளர் கௌசல்யா, கால்நடை மருத்துவர் பிரபு, ஆத்தூர் வட்டார உதவி வேளாண் அலுவலர் உமா, மருதாநதி அணை பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் முன்னோடி விவசாயிகள், நீர்பாசன சங்க உறுப்பினர்கள், உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: