பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

பழநி, ஜூன் 28: பழநி பைபாஸ் சாலையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழநி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிவகிரிப்பட்டியில் இருந்து இடும்பன் குளம் வழியாக சண்முகநதி வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தேவஸ்தான பூங்கா துவங்கி இடும்பன் கோயில் வரை இருபுறமும் தற்போது குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுகின்றன.

தவிர, வீடுகளில் அள்ளப்படும் செப்டிக் டேங் கழிவுகளும் இப்பகுதியிலேயே வெளியேற்றப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் எப்போதும் புகை மூட்டமாகவே இருக்கிறது. இதனால் வாகனஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களிலேயே கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இறைச்சி கழிவுகளை உண்ண வரும் நாய் போன்ற விலங்குகள் சாலைகளின் குறுக்கே ஓடுவதால் இச்சாலையில் விபத்துகளும் அதிகளவு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலையில் குப்பை, கட்டிட, இறைச்சி கழிவுகள் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: