புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்த வேண்டுமென மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, பிப். 6: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்த வேண்டுமென மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மன்னர் கலை அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி, அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரிகள் என 4 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதில் அறந்தாங்கி கலை அறிவியல் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்படுகிறது. இந்த கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரிகளில் உள்ள நூலங்களில் போதிய புத்தகங்கள் இல்லை. தற்போது புதிதாக வந்துள்ள புத்தகங்களை கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பாடப்புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பாடப்புத்தகத்தை மட்டுமே படித்தால் அவர்களால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியாது. பொது புத்தகம் படித்தால் சிந்தனை பிறக்கும் என்பர். அதற்கு ஏற்றார்போல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு தொடர்ந்து புதிய புதிய புத்தகங்களை வாங்கி மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்தால் தான் மாணவர்கள் பாடங்கள், பொது அறிவு, அறிவியல் அறிவு, அரசியல் அறிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தங்களது அறிவுகளை மேம்படுத்தி கொள்ள முடியும். இதை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமங்களில் உள்ள விவசாயிகள், கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள். இதனால் இவர்களுக்கு வீட்டில் பாடப்புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகள் இல்லை. இதனால் கல்லூரிகளில் உள்ள நூலகங்களில் புதிய புதிய புத்தகங்களை வாங்கி மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி பாடங்களை தாண்டி தங்களின் அறிவுகளை வளர்த்து கொள்ள தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகம் சென்று பிடித்த புத்தகங்களை எடுத்து தெளிவாக படித்து தங்களின் அறிவுகளை வளர்த்து கொள்ள வேண்டும். தற்போது நல்ல பணியில் சேர வேண்டுமானால் பாட அறிவுகள் மட்டும் இருந்தால் போதாது. அதையும் தாண்டி பொது அறிவு, உலக அறிவு என அனைத்து பிரிவுகளிலும் தங்களின் அறிவுகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய புத்தகங்களை வாங்கி கல்லூரி நூலகத்தில் வைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: