கம்பம், பிப்.6: கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துப்பாட்டில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின்பு வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களான சிரிஞ்சுகள், ஊசிகள் மற்றும் சீழ்துடைக்கப்பட்ட பஞ்சுகள், கையுறைகள் அனைத்தும் மருத்துவக்கழிவு எனப்படுகிறது. இம்மருத்துவக்கழிவுகளில் காலாவதியான மருந்துகள், வேதிப்பொருள் கழிவுகள், ஆய்வகக் கழிவுகள் மஞ்சள் நிறப்பையிலும், கெட்டுப்போன மருந்துப்பொருள்கள், ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்ச், கையுறைகள் சிவப்பு நிறப்பைகளிலும், கத்தி, உடைந்த கண்ணாடி போன்றவை வெள்ளை நிற பைகளிலும், கண்ணாடிப் பொருள்கள், மரப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிறப் பெட்டிகளிலும் நான்கு விதமாகத் தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.