கடை முன்பு மதுபோதையில் தகராறு தட்டிக்கேட்ட உரிமையாளரை தாக்கிய போதை வாலிபர்கள்

சேந்தமங்கலம், ஜன.30: கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையத்தில்,  கடை முன்பு மது போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்ட உரிமையாளர், சரமாரியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், 5 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு பகுதியைசேர்ந்தவர் மோகன்குமார்(28). இவர் செம்மேடு பஸ் நிலையத்தில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், செம்மேடு அருகே உள்ள கடையங்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தனஜெயன்(21), சீரங்கன் மகன் தினேஷ் குமார் (21), கூச்சகராய்ப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித்குமார்(21), ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார்(21), பெருமாப்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (21) ஆகிய 5 பேரும், மோகன்குமாரின் கடை முன்பு, குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக உள்ளதால், கடை முன்பு நின்று தகராறு செய்ய வேண்டாம் என மோகன்குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மோகன்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மோகன்குமார் அளித்த புகாரின் பேரில், வாழவந்திநாடு எஸ்ஐ மணி வழக்குபதிவு செய்து, மோகன்குமாரை தாக்கிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: