காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தேனி, ஜன.30: தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கூடலூர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தேனி நகர தலைவர் முனியாண்டி வரவேற்றார். இக்கூட்டத்தின்போது, திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பிப். 5ம்தேதி தேனி அல்லிநகரத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி, சிறுபான்மை இயக்கங்களை இணைத்து கையெழுத்து இயக்கம் துவங்கப்பட உள்ளது.

இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கி வைக்க உள்ளார். எனவே, பிப்.5ம் தேதி நிகழ்ச்சி நடக்க உள்ள தேனி அல்லிநகரத்திற்கு தேனி மாவட்டத்தில் அனைத்து நகர, வட்டாரங்களில் இருந்து காங்கிரஸார் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் சன்னாசி, வக்கீல்.கருப்பசாமி, கம்பம் நகர தலைவர் போஸ், வட்டார தலைவர்கள் தேனி முருகன், உத்தமபாளையம் மைதீன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், தர்மர், ரசூல், வக்கீல்.சத்தியமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்ருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தேனி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனாக பொறுப்பேற்றுள்ள தேனி வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பேற்றுள்ள குன்னூர் பாண்டியன் ஆகியோரை கட்சியினர் பாராட்டி கவுரவித்தனர்.

Related Stories: