கொரோனா வைரஸ் பாதிப்பு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கைகளை 15 முறை கழுவ வேண்டும்

கோவை, ஜன.30:   சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நோய் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் குறைந்தபட்சம் தினமும் 15 முறை கைகளை கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தற்போது வரை பாதிப்புகள் இல்லை. நோய் பாதிப்புகளை தடுக்கும் வகையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தன்சுத்தம் கடைபிடிக்க வேண்டும்.

பேருந்து, ரயில்கள், தியேட்டர், லிப்ட் போன்றவற்றில் சென்ற பிறகு கட்டாயம் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 15 முறையாவது கைகளை கழுவ வேண்டும். இதனால், நோய் வராமல் தடுக்க முடியும். இதனை பள்ளிகளிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கறி, மீன்கள் உள்ளிட்டவற்றை நன்கு கொதிக்க வைத்து சமைத்து சாப்பிட வேண்டும். வீடுகளின் கதவு கைப்பிடிகளை அடிக்கடி துடைக்க வேண்டும். ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால் போன்றவைகளில் உள்ள படிக்கட்டுகள், எக்ஸ்லேட்டர்களின் கைப்பிடிகளையும் அடிக்கடி துடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: