திருமங்கலத்தில் தீயணைப்பு நிலைய அலுவலக கட்டுமானப் பணி இழுத்தடிப்பு

திருமங்கலம், ஜன. 28:  திருமங்கலத்தில் தீயணைப்பு நிலையத்திற்கான புதிய கட்டிடப்பணி இழுத்தடிப்பதால், திறப்பு விழா தள்ளிப்போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் 50 சதவீத பணிகளே நிறைவடைந்துள்ளன.  

திருமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையம், நகரில் உள்ள ராஜாஜி சிலை அருகே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால், தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அமைச்சர் உதயக்குமார் பரிந்துரையால், திருமங்கலம்-ராஜபாளையம் சந்திப்பில் ஆறுகண் பாலம் அருகே ரயில் பாதையையொட்டி, ரூ.98 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. கடந்தாண்டு ஜன.23ல் தொடங்கிய பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இக்கட்டிடத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி அறை, பணியார்கள் ஓய்வறை, பதிவறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைநீர்தேக்க தொட்டி, ஊழியர்களுக்கான கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணியை விழுப்புரத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தாண்டு ஜனவரியில் பணிகள் நிறைவடைந்து தீயணைப்பு நிலையத்தை மாற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கட்டுமான நிறுவனம் 50 சதவீத பணிகளை மட்டும் முடித்துள்ளது. இதனால், திறப்பு விழா தள்ளிப்போகிறது. இது குறித்து காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் ஓரிறு மாதங்களில் கட்டுமானப் பணிகளை முடிக்க வலியுறுத்தியுள்ளோம். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு புதிய கட்டிடத்திற்கு  தீயணைப்பு நிலையம் மாற்றப்படும்’ என்றார்.

Related Stories: