பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: போலீசாருக்கு எஸ்பி அறிவுரை

மதுரை, ஏப்.18: பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். நடுநிலையோடு போலீசார் பணிபுரிய வேண்டும் என்று தேர்தல் பாதுகாப்பு பணி போலீசாருக்கு எஸ்பி அரவிந்த் அறிவுறுத்தினார்.

நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புறநகர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கான வாகனங்கள் தயார்படுத்தும் பணிகள் நேற்று நடந்தது. இதனிடையே மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள போலீசாருக்கான ஆலோசனைக்கூட்டமும் மாவட்ட எஸ்பி அரவிந்த் தலைமையில் நடந்தது. இதில் தேர்தல் வாக்குப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, போலீசாருக்கு எஸ்பி அரவிந்த் ஆலோசனைகள் வழங்கினார்.

வாக்குப்பதிவிற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து செல்வது, வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முறையாக பின்பற்றுவது, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து கூடுதல் கவனமுடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவது, அரசியல் கட்சியினர் வாக்காளர்களை அழைத்து வருவதை தடுப்பது, வாக்குச்சாவடி மையங்களின் அருகே கடைகள் செயல்படவோ, பொதுமக்கள் கூடவோ தடை விதித்து கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை எஸ்பி வழங்கினார். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், நடுநிலையோடு போலீசார் பணிபுரியவும் அறிவுறுத்தினார். மேலும் வாக்கு இயந்திரங்கள் எடுத்துசெல்லும் வாகனங்கள், போலீஸ் கண்காணிப்பு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி முழுமையாக கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

ஆலோசனைக்கூட்டத்தை தொடர்ந்து சோழவந்தான், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் வாகனங்கள் தயார்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின. இவற்றையும் எஸ்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: போலீசாருக்கு எஸ்பி அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: