அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 2,751 வாக்குச்சாவடி மையங்கள் ரெடி: நாளை காலை வாக்குப்பதிவு துவக்கம்

மதுரை, ஏப்.18: தமிழகத்தில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை வாக்குப்பதிவு துவங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதல்கட்ட வாக்குப் பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 ெதாகுதிகளுக்கு நாளை நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20ம் தேதி துவங்கியது. மார்ச் 27ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. மார்ச் 28ல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், மார்ச் 30ல் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறைகள் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜ சார்பில் ராம.சீனிவாசன் உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் மதுரையில் மும்முனை போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் அனல் பறக்க நடந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. ஜூன் 4ல் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கோடையின் அக்னி வெயிலையும் தாண்டி அனல்பறந்த பிரசாரம் முடிந்து, வாக்குப் பதிவிற்கான பணிகள் துவங்கியுள்ளன. மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், மதுரை மேற்கு, சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 10 தொகுதியிலும் சேர்த்து மொத்தமாக 13,21,795 ஆண்கள், 13,67,051 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர் என 26 லட்சத்து 89 ஆயிரத்து 117 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுடன் 5468 ராணுவத்தினரின் வாக்குகளும் உள்ளன. நகர் பகுதியில் 421 வாக்குப் பதிவு மையங்கள், 1474 வாக்குச்சாவடிகள், புறநகர் பகுதியில் 739 வாக்குப் பதிவு மையங்கள், 1277 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக மதுரை மாவட்டத்தில் 1160 வாக்குப் பதிவு மையங்களும், 2751 வாக்குச்சாவடிகளும் உள்ளன. 2727 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுகின்றனர். 259 பேர் மண்டல அளவிலான அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 259 வாகனங்களும் ஜிபிஆர்எஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களது பணி அனைத்தும் கண்காணிக்கப்படும். இதேபோல் வாக்குப் பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். இதற்கான அனைத்துவித ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

The post அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 2,751 வாக்குச்சாவடி மையங்கள் ரெடி: நாளை காலை வாக்குப்பதிவு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: