சமூக விரோதிகளின் கூடாரமான அவல்பூந்துறை படகு இல்லம்

ஈரோடு, ஜன. 28:   மொடக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட அவல்பூந்துறை அருகே சோளிபாளையத்தில் 239 ஏக்கர் பரப்பளவில் மிக பெரிய அளவிலான குளம் உள்ளது. அதன் அருகே கடந்த 3 ஆண்டுக்கு முன்பு படகு இல்லம் அமைக்கபட்டது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட படகு விடவில்லை. பயன்படுத்தாத நிலையில் உள்ள இந்த படகு இல்லம் தற்போது ஆங்காங்கே புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும், குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது. கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து இந்த படகு இல்லத்தை கொண்டு வந்தும் எந்த பயனும் இல்லாமல் காட்சியளிக்கிறது. எனவே 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள படகு இல்லத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பூங்கா திறக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை படகு விடப்படாமல் உள்ளது. குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல்களும் உடைந்து போய் விட்டது. ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதால் உள்ளூர் பொதுமக்கள் கூட இங்கு வர தயங்குகிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் திறந்தவெளியில் அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். குளத்தை தூர்வாரி படகு இல்லம் அமைப்பதாக கூறி ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் மண்ணை லாரி, லாரியாக விற்று வருமானத்தை பெருக்கி கொண்டது தான் மிச்சம். 3 ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் உள்ள இந்த படகு இல்லத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: