ஈரோடு மாவட்டத்தில் புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ஈரோடு, டிச.17: ஈரோடு மாவட்டத்தில் புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில், விவசாயிகள் பந்தல் அமைத்து கோவக்காய், பாகற்காய், புடலங்காய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். இதில் புடலங்காய், குறுகியகால பயிர் என்பதால், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நடவு செய்த 80 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுவதால், வியாபாரிகளும், விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று, ஒப்பந்த அடிப்படையில் புடலங்காயை கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: புடலங்காய் சாகுபடி செய்யும் வயலில், செடிகள் நன்றாக வளரும் வரை, களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு குழியில் 5 விதைகள் நடவு செய்யப்பட்ட நிலையில், நன்றாக வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற நாற்றுகளை அகற்றி விட வேண்டும். பின்னர், புடலைங்காய் கொடிகள் வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும்.
விதைகள் முளைத்து கொடி வரும்போது கொடிகளை மூங்கில் குச்சிகள் அல்லது மற்ற குச்சிகளை கொண்டு வயலில் ஊன்று கொடுத்து பந்தல் அமைக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி புடலங்காய் சாகுபடி செய்து வந்தால், ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை புடலைங்காய் மகசூல் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: