ஈரோடு, டிச. 18: ஈரோடு மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்று விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட இயற்கை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வளாகத்தில் இயற்கை சந்தையானது இன்று நடைபெற உள்ளது. இந்த இயற்கை சந்தையில், மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து, இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழ வகைகள், கீரைகள், மூலிகை வகைகள், வாழைப்பழம், வாழைப்பூ, பராம்பரிய அரிசி வகைகள் (மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, வாசனை சீராக சம்பா, கிச்சிலி சம்பா, மைசூர்மல்லி, காட்டுயாணம், ரத்தசாலி, தூயமல்லி, கருங்குறவை) வேர்க்கடலை, எள்ளு, தேங்காய், பாரம்பரிய அரிசியில் செய்த அவல் வகைகள், நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டைகள், வெல்லம், நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள், சிறுதானியம் (சாமை, தினை, வரகு, பனிவரகு, கேழ்வரகு, சோளம், கரும்பு, குதிரைவாலி), கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, ஆவாரம்பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி, மாம்பழம், நாட்டுமாடு பால், நெய், சிப்பிக்காளாண், தேன் போன்றவைகளை விவசாயிகள் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உள்ளனர். இந்த இயற்கை சந்தையில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி பயன்பெறலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
