குமரி மாவட்டத்தில் ஒரு கி.மீட்டரில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் மரம் அறுவை ஆலை உரிமையாளர் சங்கம் மனு

நாகர்கோவில், ஜன.28:   குமரி மாவட்ட மரம் அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தாமஸ், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் ராஜ்பினோ, துணைத்தலைவர் ரசல்ராஜ் உள்பட நிர்வாகிகள் வடசேரியில் மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டம் பரப்பளவில் மிக சிறியது ஆகும். இங்கு வன பாதுகாப்பு எல்லையில் இருந்து 3 கி.மீ தூரத்துக்கு சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் இருக்க வேண்டும் என வரைபடம் தயாரித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளைநிலங்கள், தொழில் நிறுவனங்கள், நீர்மின் திட்டங்களும் உள்ளன. வனத்துறை வெளியிட்டுள்ள இந்த வரைபடம், அறிக்கையை செயல்படுத்தினால் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பின்புதான் வனத்துறை முடிவு செய்யவேண்டும். இது தொடர்பான வழக்கில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் வனப்பகுதியில் இருந்து ஒரு கி.மீ தொலைவிற்குள் இருந்தால் போதும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதனை பின்பற்றி கேரளா, கோவா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை ஒரு கி.மீ.க்குள் அறிவித்துள்ளன. அதனை பின்பற்றி சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் என்பது குமரி மாவட்ட வன பகுதியில் இருந்து ஒரு கி.மீ.க்குள் என அறிவிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மரம் அறுவை ஆலைகள் நடத்தி வந்த நிறுவனங்கள் அனுமதி கேட்டு வன அலுவலகத்தில் விண்ணப்பித்த நிலையில் மாவட்ட வன அலுவலக பரிசீலனை முடிந்து மண்டல வன அலுவலகத்தால் பரிசீலனை முடிந்தும் இன்னும் அனுமதி சான்று வழங்கவில்லை.

அவர்களுக்கு அனுமதி சான்று வழங்க வேண்டும். அனுமதியை புதுப்பித்து தர வன அலுவலகத்தில் விண்ணப்பித்த மர அறுவை ஆலை நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். கீரிப்பாறையில் தொடங்கப்பட்ட சூழியல் சுற்றுலா மையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் பட்டா நிலங்களில் வளர்க்கப்படுகின்ற அயினி மரங்களை வெட்ட தடை செய்யாமல் வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் ஆல்பர்ட் தாமஸ், ராஜன், டென்னிசன், பெனட்ஜாண், வர்க்கீஸ், சுரேஷ், ராஜன், கோபி, வின்சென்ட் உட்பட பலர் உடன் வந்திருந்தனர்.

Related Stories: