விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பரபரப்பு வங்கி அதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியவில்லை

செங்கல்பட்டு, ஜன.24: செங்கல்பட்டில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் தீயில் கருகிய கருக்புக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. அதற்கான சான்றிதழ் வழங்க அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடந்தது. அதில், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உள்ள இரும்புலிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  நாகராஜ் கலந்து கொண்டு பேசுகையில், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில்  கரும்பு விவசாயம் செய்தேன். கடந்த  சில நாட்களுக்கு முன், நான் ஊரில் இல்லாதபோது. திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்பு பயிர் முழுவதும் எரிந்து நாசமானது. இது சம்பந்தமாக இழப்பீடு கோரி, வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்டேன்.  ஆனால் அவர்கள், விஏஓவிடம் கடிதம் வாங்கிவர சொன்னார்கள். விஏஓவிடம் கடிதம் கேட்டதற்கு, காவல் நிலையத்தில் எப்ஐஆர். காப்பி  வாங்கி வரும்படி கூறினானர். இதையடுத்து காவல் நிலையத்தில் முறையிட்டால், மின்வாரியத்திடம்  முதலில் கடிதம் வாங்கி வரவேண்டும் எனகூறினர். அதன்படி மின்சார வாரியத்திடம் கேட்டால்  எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என கூறி கடந்த 2 மாதமாக பல இடங்களுக்கு அலைக்கழிக்கின்றனர்.

எனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.  கரும்பு பயிரிட்டது  தவறா,  இல்லை விவசாயம் செய்வது தவறா, இந்த நாட்டில் தானே நான் பிறந்தேன்.  வங்கியில் வாங்கிய கடன்  வட்டியுடன்  ஏறிவிட்டது.  ஒரு பக்கம்  கரும்பு எரிந்து  நாசமானது. இன்னொரு பக்கம்  வங்கி அதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியவில்லை என கூறி கதறி அழுதார். இதனைக் கேட்ட  மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, விவசாயிகள் கேட்கும் சான்றிதழை   உடனடியாக கொடுக்க  அனைத்து  விஏஓக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்.  வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயி நாகராஜுக்கு  உரிய நிவாரணம்  பெற்று தரவேண்டும்  என்றார். இதற்கிடையில், விவசாயி நாகாஜுக்கு, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும்  விவசாயிகள் ஆறுதல் கூறி, சமாதானம் செய்தனர்.

Related Stories: