எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்

ஈரோடு, ஜன.23: விதை நேர்த்தி செய்து பயிரிட்டால் எள் சாகுபடியில் வேர் அழுகல் நோய் ஏற்படாது. அதிக மகசூல் பெறலாம் என ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் ஆசைதம்பி கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலைக்கு அடுத்து, எள் முக்கிய பயிராகும். தமிழகத்தில், 74,000 ஹெக்டேரில் எள் சாகுபடியாகி, 32 லட்சம் டன் உற்பத்தியாகிறது. ஒரு ஏக்கருக்கு 180 கிலோ மகசூல் கிடைக்கும். தொழில்நுட்பம் மூலம் 3 மடங்காக அதாவது 500 கிலோவாக உற்பத்தி செய்யலாம். இறவை எள் விதைப்புக்கு ஜனவரி, பிப்ரவரி ஏற்ற மாதம். டி.எம்.வி., 3, 4, 6, கோ1, வி.ஆர்.அய்1, எஸ்.வி.பி.ஆர்.1 (வெள்ளை எள்) ஆகியவை ஏற்றது. இவை 80 முதல் 90 நாள் பயிராகும். வெள்ளை எள்ளில் 53.8 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. கரிசலும், மணலும் கலந்த செம்மண்ணிலும், களி நிறைந்த கரிசல் மண்ணிலும் எள் நன்கு வளரும். களர், உவர் நிலங்களில் எள் வளர்ச்சி பாதிக்கப்படும். எள் பயிர் நீர் தேங்கும் வயல்களில் சரியாக வளராது. வடிகால் வசதி அவசியம் தேவை. எள் நீண்ட ஆணி வேரை கொண்டதால், நிலத்தை நன்கு, 3, 4 முறை உழுது, மண்ணை பொலபொலப்பாக்கி, கட்டிகள் இல்லாமல் பக்குவப்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. இத்துடன், 10 கிலோ மணல் கலந்து சீராக விதைக்க வேண்டும். விதைக்கும் முன் ஒரு கிலோ விதைக்கு, இரண்டு கிராம் கார்பன்டாசீம் மருந்து அல்லது டிரைகோடெர்மா விரிடி என்ற நன்மை செய்யும் பூஞ்சாண உயிர் மருந்தை கிலோவுக்கு, 4 கிராம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்கலாம்.

விதைக்கும் நாளில் அரை மணி நேரம் முன் அரிசி கஞ்சியில் 200 கிராம் அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டலம் பாஸ்போ பேக்டீரியா உயிர் உரங்களை கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்வதால், வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தும். முதலில் விதை நேர்த்தி செய்து, உயிர் உரம் கலந்து விதைக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஐந்து டன் மக்கிய குப்பை இட வேண்டும். ஏக்கருக்கு, 30 கிலோ யூரியா, 56 கிலோ சூப்பர் பாஸ்பேட், 15 கிலோ பொட்டாஷ் அடி உரமாக இட வேண்டும். மணலுடன், இரண்டு கிலோ மாங்கினீசு சல்பேட் உரத்தை கலந்து, விதை விதைத்த பின் மேலாக தூவ வேண்டும். மேலும், ஏக்கருக்கு, 80 கிலோ ஜிப்சம் இடுவது சிறந்தது. ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்பு, கந்தக சத்துக்கள் எள் மணிகள் அதிகம் பிடிக்கவும், எண்ணெய் சத்து அதிகரிக்க உதவும். தழைச்சத்து எள் பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பயிர் முதிர்ச்சியுற்று, அதிக மணிகள் பிடிக்க மணிச்சத்தும், நோய் தாக்குதல் குறையவும், தழைச்சத்தின் திறனை அதிகரிக்கவும், சாம்பல் சத்தும் பயன்படுகிறது. எனவே, எள்ளுக்கு சமச்சீர் உரமிடுவது அவசியம். அடர்த்தியாக விதைத்த பின், ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளியில் விதைத்த, 30வது நாளுக்குள் பயிர்களை கலைத்து விட வேண்டும். இடைவெளி குறைந்தால் செடிகள் இலைகள் இல்லாமல், குச்சிபோல வளர்ந்து பூப்பூப்பது தாமtதமாகும். பயிர் கலைக்கும் போது நிலத்தில் ஈரம் இருப்பது அவசியம்.

எள் பயிருக்கு மண் தன்மையை பொறுத்து, 5, 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்தவுடன் ஒரு முறையும், ஏழாவது நாளில் உயிர் நீர் தேவை. மேலும், 25வது நாளிலும், பூப்பூக்கும் சமயத்திலும், காய் பிடிக்கும்போதும், காய் முதிர்ச்சியாகும் போதும் நீர் பாய்ச்ச வேண்டும். 25 முதல் 45வது நாட்களில் பாசன நீர் அல்லது மழை இல்லையெனில் மகசூல் பாதிப்படையும். 65ம் நாளில் இருந்து பாசன நீர் தேவையில்லை. மழை பெய்தால் உடன் நீரை வடித்து விட வேண்டும் அல்லது மணிகள் சிறுத்து போய் பதர் அதிகரிக்கும். பூக்கள் உதிர்வதை தடுத்து காய் பிடிப்பதை அதிகரிக்க மூன்று மில்லி ‘பிளோனோபிக்ஸ்’ மருந்தை, 4.5 லிட்டர் நீரில் கலந்து விதைத்த, 30, 45, 60வது நாளில் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இளம் புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஐந்து சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் அல்லது குளோரிபைபாஸ் ஏக்கருக்கு 250 மில்லி அல்லது இண்டாக்சாகாப் 100 மில்லி என ஏதேனும் ஒன்றை தெளித்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: