பழங்குடியினர் என அறிவிக்கக்கோரி காட்டு நாயக்கர் சமூகத்தினர்ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முற்றுகை

தேவகோட்டை. ஜன. 23: பழங்குடியினர் என அறிவிக்கக்கோரி காட்டுநாயக்கர் சமூகத்தினர் தேவகோட்டை ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி பாப்பாஊருணி பகுதியில் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த குடியிருப்பு உள்ளது. 400 வீடுகளுக்கும் மேல் உள்ள பகுதியில் இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆயிரத்திற்கும் மேல் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது சமூகத்தை பழங்குடியினராக அறிவிக்கக்கோரி கடந்த 15 வருட காலமாக போராடி வருகின்றனர். தற்போது காட்டுநாயக்கர் சமுதாயத்தினருக்கு, தொட்டிநாயக்கர் சமூகம் என சாதிச்சான்றிதழ் அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைக் கண்டித்து கடந்த மூன்று தினங்களாக காட்டுநாயக்கர் சமூக பள்ளி மாணவ, மாணவிகள் காரைக்குடி குடியிருப்பில் இருந்தபடி கல்வி நிலையங்களுக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அம் மாணவர்கள், தங்களின் பெற்றோர்கள் 500 பேருடன் தேவகோட்டை ஆர்டிஓ அலுவலகம் உள் வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். தேவகோட்டை ஆர்டிஓ சங்கரநாராயணன் அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். காட்டுநாயக்கர் சமுதாய மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், காரைக்குடி பாப்பாஊருணி செயலாளர் சங்கர், பொருளாளர் முத்துக்குமார், சங்கரபாண்டி, இளைஞரணி தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஆர்.டி.ஓ. சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார். வரும் பிப்ரவரி மாதம் மறு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக பதில் வந்தது. ஆர்.டி.ஓ. கூடியிருந்த மக்களிடம் விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: